ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசினார்.
தூத்துக்குடி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளருமான வாசுகி நேற்று காலை தூத்துக்குடியில் கூறியதாவது:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ரத்தம் சிந்திய பூமி தூத்துக்குடி. சிந்திய ரத்தம் காய்வதற்கு முன்பே, அதனை கொல்லைப்புறமாக திறப்பதற்கான வழிகளை அந்த ஆலை நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்கு எந்தவித தடையையும் அரசோ, மாவட்ட நிர்வாகமோ செய்யவில்லை.
தூத்துக்குடியில் நோட்டீசு அச்சடிப்பதற்கு முன்பு போலீசில் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட பேசிவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற செயல்களை போலீசார் செய்கின்றனர். அனைத்து கட்சிகளையும் இதுதொடர்பாக அழைத்து பேச முடிவு செய்து உள்ளோம். இந்த உத்தரவை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான விஷயங்களை கூறி வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறப்பதை வேகப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆகையால் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஆலையின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஆலை சீல் வைக்கப்பட்டதை குறிப்பிடவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர். இது போன்று பல உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிக்கின்றனர். ஆகையால் இந்த ஆலை நிரந்தரமாக மூடுவதை வலியுறுத்தி நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிறோம். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பொய்களை அம்பலப்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் நிற்கும். இவ்வாறு வாசுகி கூறினார்.