சட்டத்தை உருவாக்குபவர்கள் அதை மதிக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி கருத்து

சட்டத்தை உருவாக்குபவர்கள் அதை மதிப்பவர்களாக இருக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Update: 2018-07-29 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்பேரில் நேற்று காலை நகரப்பகுதிகளில் தூய்மைப்பணிகளை அவர் சைக்கிளில் சென்று பார்வையிட்டார். கழிவுநீர் வாய்க்கால்களை பார்வையிட்ட அவர் பேனர்கள் வைத்திருப்பதையும் கண்டார். அவை அனுமதிப்பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து சீகல்ஸ் ஓட்டல் வளாகத்தில் பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்களை அழைத்து பேசினார். அப்போது மழைக்காலத்தில் வாய்கால்களை தூர்வாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுத்திட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயலாளர் தேவேஷ்சிங், தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை சட்டசபையில் வருகிற 31–ந்தேதிக்குள் நிதி மசோதாவுக்கு அனுமதி பெற தெரிவித்துள்ளேன். அதன்படி சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவுக்கு அனுமதி பெற்று எனக்கு அனுப்பினால் சற்றும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன்.

3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. சட்டத்தை உருவாக்குபவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்கவேண்டும். சட்டசபை என்பது சட்டத்தை உருவாக்கும் இடம்.

சட்டத்தை உருவாக்குபவர்கள் எப்படி சட்டத்தின்படி இணங்கி நடக்காமல் இருப்பார்கள்?

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

முன்னதாக கவர்னர் கிரண்பெடியுடன் ஆய்வுக்கு சென்ற அவரது உதவியாளர் நிஷா 100 அடி ரோட்டில் செல்லும்போது சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவரது உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இதனால் ஆய்வின்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்