நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சட்டமன்ற கூட்டம் கூடுவது தள்ளிப்போகிறது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிப்பு
நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கும் விவகாரத்தில் முடிவு செய்யப்படாததால் சட்டமன்ற கூட்டம் தள்ளிப்போகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் அந்த மாதத்தையும் சேர்த்து 4 மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசு துறைகளின் செலவினங்களுக்கு அப்போது ஒப்புதல் பெறப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கடந்த 4–ந்தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்கி நடந்து வந்தது. கடந்த 19–ந்தேதியுடன் நிறைவு பெற்று விட்டதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. இந்த சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்காததால் அரசு துறைகளின் செலவு மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்க முடியாமல் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தார். இதற்காக அரசுக்கு அவர் நிபந்தனையும் விதித்து இருந்தார். அதாவது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.
ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிப்பதில் ஆட்சியாளர்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் தனக்கு நிபந்தனை விதிப்பதை சபாநாயகர் வைத்திலிங்கமும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கவர்னரின் நிபந்தனை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக டெல்லி சென்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்களுடன் கலந்து பேசி அ வர்களிடம் சபாநாயகர் வைத்திலிங்கம் ஆலோசனை ஆலோசனை பெற்று இருப்பதாக தெரிகிறது.
இன்று (திங்கட்கிழமை) சட்டமன்றத்தை கூட்ட திட்டமிடப்பட்டிருந்தது. நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்கும் விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் ஓரிரு நாட்கள் தள்ளி சட்டமன்றத்தை கூட்ட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்படாததால் புதுவை அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்துக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் மற்ற செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்படாமல் உள்ள தொகையை எடுத்து சம்பளமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் அவ்வாறு நிதியை எடுத்து வழங்குவது மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கும். எனவே கோப்புகளை தயார் செய்து முறைப்படி ஒப்புதல் பெற்று சம்பளம் வழங்கவே அரசு விரும்புகிறது. இதற்கு தாமதம் ஆகும் என்பதால் ஜூலை மாதத்துக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே ஒரு சில நாட்கள் தாமதமாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.