டி.கல்லுப்பட்டி அருகே லாரி கவிழ்ந்து வாலிபர் பலி; 34 பேர் படுகாயம்
டி.கல்லுப்பட்டி அருகே பக்தர்கள் சென்ற லாரி கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரையூர்,
மதுரை திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி பகுதிகளை சேர்ந்த சுமார் 50 பேர் காரைக்கேணி அருகே உள்ள முனியாண்டி கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு லாரியில் சென்றனர். விருதுநகர் சாலையில் காரைக்கேணி விலக்கு அருகே சென்ற போது திடீரென லாரி நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் வந்த அனைவரும் தூக்கிவீசப்பட்டு கிடந்தனர்.
இதில் மணிகண்டன் (வயது 16), ரமேஷ் (23), மாரிசெல்வம் (20), முத்தையா (18) ரவிகுமார் மகன் மணிகுமார் (17) உள்பட 34 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினரும், டி.கல்லுப்பட்டி போலீசாரும் விரைந்து வந்து காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம், பேரையூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆஸ்பத்திரிகளில் இருந்து தலா 6 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.
அதில் வழியிலேயே வன்னிவேலாம்பட்டியை சேர்ந்த மணிகுமார் இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டிபன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தகவலறிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி பழங்கள் வழங்கினார். டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். விபத்தில் பலியான வாலிபரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.