காட்டு யானையை விரட்ட டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் லாரிகள் மூலம் தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Update: 2018-07-29 22:00 GMT

ஆனைமலை,

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப் வனச்சரகத்திற்குட்பட்ட கோழிக்கமுத்தி பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு ஒரு குட்டி யானை உள்பட மொத்தம் 25 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுதல், யானை சவாரி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானைகளை அடக்கவும் கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானைகளை பயன்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி டாப்சிலிப் வனத்துறையிடம் கும்கி யானைகளை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, டாப்சிலிப்பில் உள்ள கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகளை தேனிக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன்படி வனச்சரகர் நவீன் மேற்பார்வையில் 2 கும்கி யானைகள் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இருந்து நேற்று மாலை தனித்தனி லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தேனிக்கு புறப்பட்டு சென்றன.

இதுகுறித்து டாப்சிலிப் வனச்சரகர் நவீன் கூறியதாவது:–

தேனியில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டாப்சிலிப்பில் உள்ள 2 கும்கி யானைகள் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. யானைகளுடன் பாகன்களும், உதவியாளர்களும் செல்கின்றனர். அங்கு அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானைகளை கட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் இவ்விரு கும்கிகளும் ஈடுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்