காவிரியில் கர்நாடகம் திறந்து விட்ட உபரி நீரை கூட சேமிக்க முடியாதது தமிழகத்துக்கு தலைகுனிவு

காவிரியில் கர்நாடகம் திறந்து விட்ட உபரி நீரை கூட சேமிக்க முடியாதது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்று தொல். திருமாவளவன் கூறினார்.

Update: 2018-07-29 23:00 GMT
செம்பட்டு,

தி.மு.க. தலைவர் கருணா நிதியின் உடல் நிலை மிகவும் வருத்தத்துக்குரிய நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர் முழுமையான உடல் நலம் பெறவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் எனது வேண்டுகோளை விடுக்கிறேன். அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் கருணாநிதி. சுமார் 50 ஆண்டுகள் தமிழக அரசியல் அவரை சுற்றியே நடந்து இருக்கிறது. துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து இருப்பது நாகரிகத்தை புதுப்பித்து இருக்கிறது.

நாங்கள் திறந்து விடும் தண்ணீரை தமிழகத்தில் சேமிக்க முடியவில்லை, வீணாக கடலில் கலந்திருக்கிறது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறி இருக்கிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி மாதா மாதம் திறந்து விடவேண்டிய தண்ணீரை அவர் திறந்து விட்டு இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

கர்நாடகத்தில் உள்ள அணைத்து அணைகளும் நிரம்பிய பின்னர் வேறு வழியே இல்லை என்கிற நிலையில் தான் உபரி நீரை அவர்கள் திறந்து விட்டு இருக்கிறார்கள். அந்த உபரி நீரை கூட சேமித்து வைக்க முடியாமல் இருப்பது தமிழகத்திற்கு தலை குனிவு தான்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்