சாயப்பட்டறை அமைக்கக்கூடாது என்று கூறி ஆஞ்சநேயரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்
சாயப்பட்டறை அமைக்க கூடாது என்று ஆஞ்சநேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தார்கள்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே தயிர்பாளையம் பகுதியில் தனியார் சிலர் சாயப்பட்டறை தொழிற்சாலை அமைக்க பணிகளை தொடங்கி உள்ளார்கள்.
இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலம் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு சாயப்பட்டறை தொழிற்சாலை அமைக்க கூடாது என்று கூறி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சிலநாட்களுக்கு முன் மனு கொடுத்தார்கள். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் தயிர்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று ஒன்று திரண்டு அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார்கள். பின்னர் சாமியிடம் சாயப்பட்டறை தொழிற்சாலை இந்த பகுதியில் அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தார்கள். பின்னர் சிறிது நேரம் சாமியை வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.