33 பேர் பலியான சுற்றுலா பஸ் விபத்தில் உயிர் தப்பியவர்கள் உருக்கம்

ராய்காட் அருகே சுற்றுலா பஸ் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் உருக்கமாக பேட்டி அளித்தனர்.

Update: 2018-07-28 23:39 GMT
மும்பை,

ராய்காட் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்து 33 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பஸ்சில் சென்ற பல்கலைக்கழக ஊழியர் பிரகாஷ் சாவந்த் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அம்பேனாலி மலை ரோட்டில் பஸ் ஒரு திருப்பத்தில் திரும்பியது. அப்போது அங்கு கிடந்த சிறு, சிறு கற்கள் மற்றும் சகதியால் பஸ்சின் டயர் வழுக்கியது. அப்போது என்ன நடக்கிறது என நாங்கள் சுதாரிப்பதற்குள் நொடிப்பொழுதில் பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்தது. அப்போது பள்ளத்தாக்கில் இருந்த மரங்களில் பஸ் சிக்கி நின்றது. நான் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ்சில் இருந்து வெளியே குதித்து மரத்தை பற்றிக்கொண்டேன்.

பின்னர் ஒரு வழியாக மேலே ஏறி வந்தேன். அப்போது மேலே மக்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள். நான் அங்கு நின்ற ஒருவரிடம் செல்போனை வாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தேன்.

சுமார் 40 பேர் எங்களுடன் புகழ்பெற்ற மகாபலேஷ்வர் சுற்றுலா தளத்திற்கு பயணிக்க இருந்தனர். ஆனால் நாங்கள் சென்ற பஸ் சிறியதாக இருந்ததால், இட பற்றாக்குறை காரணமாக பலர் கடைசி நிமிடத்தில் பயணிப்பதை தவிர்த்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் உடல்நிலை சரியில்லாததால் இந்த சுற்றுலா செல்லாத பிரவீன் ரன்தீவ் என்பவர் கூறுகையில், நாங்கள் விடுமுறையையொட்டி சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தோம். காலை 6.30 அளவில் எனக்கு போன் செய்து அழைந்தனர். ஆனால் உடல்நிலை காரணமாக என்னால் அவர்களுடன் செல்ல முடியவில்லை.

இருப்பினும் அவர்கள் என்னிடம் “வாட்ஸ்அப்” குழுவில் தொடர்பிலேயே இருந்தனர். தொடர்ந்து பயணத்தின் போது எடுக்கும் புகைப் படத்தை அனுப்பிக்கொண்டு இருந்தனர்.

கடைசியாக அவர்களிடம் இருந்து காலை 9.30 மணிக்கு குறுந்தகவல் வந்திருந்தது. பின்னர் நான் அனுப்பிய எந்த தகவலுக்கும் பதில் இல்லை. காலை 12.30-க்கு தான் விபத்து குறித்த அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது.

விபத்தில் இறந்த அனைவருக்கும் 30-ல் இருந்து 45 வயதிற்குள் இருக்கும். திருமணம் ஆகாத சிலரும் இருந்தனர்.

இவ்வாறு பிரவீன் ரன்தீவ் கூறினார். 

மேலும் செய்திகள்