வேடசந்தூர் அருகே காரில் கடத்தி வந்த ரூ.47 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

வேடசந்தூர் அருகே வாகன சோதனையின் போது, காரில் கடத்தி வந்த தடை செய்யப்பட்ட ரூ.47 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வியாபாரியும் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-28 23:00 GMT
வேடசந்தூர்,

கரூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டிற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக எரியோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

காரை எரியோட்டை சேர்ந்த வியாபாரியான காளியப்பன்(வயது38) என்பவர் ஓட்டிவந்தார். அவரிடம் காரில் இருந்த அட்டைப்பெட்டிகளில் என்ன இருக் கிறது? என்று போலீசார் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த அட்டைப்பெட்டிகளை சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.47 ஆயிரம் ஆகும்.

இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த வியாபாரி காளியப்பனை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் மற்றும் அதை கடத்த பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்