திண்டுக்கல் கோர்ட்டுக்கு வந்த கொடைக்கானல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாயம் - மனைவி புகார்

திண்டுக்கல் கோர்ட்டுக்கு வந்த கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2018-07-28 22:45 GMT
பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 45). இவர், கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மீனாட்சி (39) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். பாண்டி தனது குடும்பத்துடன் பட்டிவீரன்பட்டியில் வசித்து வந்தார். அங்கிருந்து தினமும் கொடைக்கானலுக்கு பணிக்கு செல்வது வழக்கம்.

இந்தநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது தாயாரை வத்தலக்குண்டுவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பாண்டி அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் அவரை வீட்டில் கொண்டு வந்து விட்டார். பின்னர், பணி நிமித்தமாக திண்டுக்கல் கோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அதன்பிறகு பாண்டி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதற்கிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாண்டியின் தாயார் இறந்து விட்டார். இந்த தகவலை தெரிவிப்பதற்காக மீனாட்சி தனது கணவரின் செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால், செல்போனை வேறு ஒரு நபர் எடுத்து பேசியுள்ளார். அப்போது, திண்டுக்கல் கோர்ட்டு வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதன் மீது போனை வைத்துவிட்டு பாண்டி எங்கேயோ சென்றுவிட்டதாக அந்த நபர் கூறினார்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் பாண்டியை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று முன்தினம் அவருடைய தாயாரின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். கடந்த 4 நாட்களாக பாண்டியை காணாததால், அவரை கண்டுபிடித்து தருமாறு பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்