அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12½ லட்சம் மோசடி, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2 பேர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-28 22:45 GMT

விழுப்புரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுரேஷ் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு திருச்சி அரசு போக்குவரத்துக்கழகத்தில் டெக்னீசியராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த வரதராஜன் (54) என்பவர் அறிமுகமானார்.

அப்போது சுரேஷிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக வரதராஜன் கூறினார். இதை நம்பிய சுரேஷ், வரதராஜனிடம் தனக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பணம் செலவாகும் என்று கூறிய வரதராஜன் மற்றும் அவரது மனைவி அனுராதா, திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் திண்டிவனம் வீரான்குளத்தை சேர்ந்த ஆசிர்வாதம் (47) ஆகியோர் சேர்ந்து தவணை முறையில் சுரேஷிடம் இருந்து ரூ.8 லட்சம் பெற்றனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி திண்டிவனத்தில் உள்ள சுரேஷின் நண்பர்களான மகாலிங்கத்திடம் இருந்து ரூ.2 லட்சத்தையும், சரவணனிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தையும் 3 பேரும் பெற்றனர்.

ஆனால் வரதராஜன் உள்ளிட்ட 3 பேரும், சுரேஷ், அவரது நண்பர்கள் மகாலிங்கம், சரவணன் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்காமல் மொத்தம் ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்தை மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வரதராஜன், அனுராதா, ஆசிர்வாதம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல இருந்த வரதராஜன், ஆசிர்வாதம் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்