மாவட்டத்தில் 312 பேருக்கு ரூ.3.58 கோடி மதிப்பில் கடனுதவி அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 312 பேருக்கு ரூ.3 கோடியே 58 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

Update: 2018-07-28 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் காந்தி ரோட்டில் கூட்டுறவு அலுவலக வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க புதிய அலுவலக கட்டிடம், ஓசூர் தாலுகா ஏ.சாமணப்பள்ளியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பத்தலப்பள்ளி மார்க்கெட் கிளை வங்கி திறப்பு விழா நடந்தது.

விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங் களை திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, மாவட்ட கலெக்டர் கதிரவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் 312 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 58 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள கடனுதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட்டுறவு துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2013-2014-ம் ஆண்டு முதல் 2018 வரையில் 6 ஆயிரத்து 929 பேருக்கு ரூ.30.89 கோடி காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 352 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ. 15.40 கோடிக்கு கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிறு குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் 93 ஆயிரத்து 367 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. தனியார் மற்றும் தேசிய வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு சங்கங்கள் செயல்படுவதற்கு ஏதுவாக இரும்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அலுவலக கட்டிடங்கள், சுற்று சுவர் கட்டுதல், குடிநீர் வசதி, வாகனம் நிறுத்தும் இடம், பாதுகாப்பு வசதிக்கான நவீன கேமராக்கள் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கேசவன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரேணுகா, துணை பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் கே.நாராயணன், ஆவின் தலைவர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்