போலீசாருடன் தகராறு செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
தேவகோட்டையில் போலீசாருடன் தகராறு செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்,
தேவகோட்டை,
தேவகோட்டை சத்திரத்தார் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 53). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது கோட்டையம்மன் கோவில் திருவிழாவிற்காக அவர் தேவகோட்டை வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று தனது மாமியாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கோட்டையம்மன் கோவில் பகுதியில் சென்றார். திருவிழா நேரம் என்பதால் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் டவுன் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வேலாயுதம் செல்ல முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் வேலாதம், போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக வேலாயுதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.
இதற்கிடையில் நகரத்தார்கள் சார்பில் வேலாயுதம் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், அதற்கு காரணமானதாக சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.