புதிய ஆணையம் அமைக்கப்பட்டால் ‘மருத்துவ சேவை என்பது வியாபார சந்தை ஆகிவிடும்’ இந்திய மருத்துவ கழக முன்னாள் மாநில தலைவர் பேட்டி

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால் மருத்துவ சேவை என்பது வெளிநாட்டு வியாபார சந்தையாகிவிடும் என்று இந்திய மருத்துவ கழக முன்னாள் மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்தார்.

Update: 2018-07-28 22:45 GMT

காரைக்குடி,

காரைக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:–

அகில இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருகிறது. இச்சட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் எதிர்த்து வருகிறார்கள். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் மருத்துவக்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும். தனியார் மருத்துவக்கல்லூரிகள் பணக்காரர்களின் வேட்டைக்காடாகும். இந்தியாவில் நவீன மருத்துவத்தின் தனித்தன்மை அழியும். அவசர மருந்துகளின் விலை அதிகரிக்கும். இந்திய மருத்துவ சேவை வெளிநாடுகளின் வியாபார சந்தை ஆகிவிடும். மருத்துவ சேவையில் மாநிலத்தின் உரிமை பறிபோகும். எல்லா நாடுகளிலும் மருத்துவக்கல்வி, மருத்துவப்பணி, மருத்துவ சேவை டாக்டர்களால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆனால் வரைவுச் சட்டம்–2016 மூலம் மருத்துவத்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் நுழைந்து முறையான தகுதி பெறாதவர்களை அரசு ஆணை மூலம் அங்கீகரித்து மருத்துவ தொழில் செய்ய மத்திய அரசுக்கு அளவில்லாத அதிகாரத்தை இந்த வரைவு சட்டம் வழங்குகிறது என்று அனைத்து மருத்துவ சங்கங்களும் கருதுகின்றன.

எனவே இந்தியா முழுவதும் நாளை ஒருநாள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிதும், பெரிதுமான மருத்துவமனைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும். அவசர நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும். ஏற்கனவே மத்திய அரசிற்கும், மருத்துவ சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து விட்டநிலையில், மத்திய அரசு இந்த சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டம் அறிவிக்கப்படும் என அகில இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்