நெகமம் அருகே தொழிற்சாலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பறிமுதல், உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை
நெகமம் அருகே தொழிற்சாலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. கலப்படம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சோதனை நடத்தினார்.
நெகமம்,
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஆல்பிரட். இவருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வரதனூர் ஊராட்சிக்குட்பட்ட மூட்டாம்பாளையத்தில் உள்ளது. இவர் அங்கு வணக்கம் ஆயில் நிறுவனம் என்ற பெயரில் தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) ஆகிய சமையல் எண்ணெய்களை உற்பத்தி செய்து கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்தார். இந்த நிலையில் இந்த எண்ணெய்களில் கலப்படம் செய்வதாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகைக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து அவர், ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம், சுப்புராஜ், சிவானந்தம் ஆகியோருடன் சென்று அதிரடி சோதனை நடத்தனர். அப்போது அங்கு தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதற்கு பயன்படுத்த 2 டேங்கர் லாரிகளில் பாமாயிலும் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதில் இருந்து சிறிதளவில் எண்ணெய் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்களை ஆய்வுக்காக எடுத்தனர். பின்னர் அங்கிருந்த 64 ஆயிரத்து 777 லிட்டர் சமையல் எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.70 லட்சமாகும். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:–
இந்த தொழிற்சாலைக்கு ஆந்திர மாநிலம், மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இருந்து டேங்கர் லாரி மூலம் பாமாயில் வரவழைக்கப்படுகிறது. அதில் இருந்து தேங்காய் எண்ணைய், சன்பிளவர் ஆயில் என சமையல் எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதனை ஒரு லிட்டர், அரை லிட்டர், மற்றும் டின்களில் அடைத்து, பல்வேறு பெயர்களில் கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புவதும் தெரியவந்துள்ளது. இந்த சமையல் எண்ணெய் மாதிரி ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆய்வுக்கு பிறகு, சமையல் எண்ணெய்யில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.