கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது; போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-07-28 22:30 GMT

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் இங்கிலீஸ் காய்கறிகள் மட்டுமின்றி சைனீஸ் காய்கறிகள் பயிரிடுவதற்கும் ஏற்ற காலநிலை நிலவுகிறது. இதனால் கோத்தகிரி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, குருக்கத்தி, மசக்கல், கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சைனீஸ் காய்கறிகளை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக புரூக்கோலி, செல்லரி, பாலக், சைனீஸ் கேபேட்ஜ், சுகுனி உள்ளிட்டவைகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மேற்கண்ட சைனீஸ் காய்கறிகள் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலமாக மும்பைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 20–ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்காரணமாக மேற்கண்ட கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட புரூக்கோலி காய்கறிகள் கட்டபெட்டு குடுமனை கிராமத்தில் உள்ள குளிர்சாதன கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் கட்டபெட்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயிக்கு சொந்தமான ரூ.4 லட்சம் மதிப்பிலான 4 டன் எடையுள்ள புரூக்கோலிகள் மும்பைக்கு நேற்று காலை கட்டபெட்டில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த கன்டெய்னர் லாரியை மும்பையை சேர்ந்த முன்னா யாதவ் (வயது 30) என்ற டிரைவர் ஓட்டி சென்று உள்ளார். கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கொணவக்கரை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தாறுமாறாக சென்று சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சாலையில் நடுவே கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ரோந்து காவல் சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கன்டெய்னர் லாரியை சாலையோரத்திற்கு அப்புறப்படுத்தினர். அதன் பிறகு சாலையின் ஒருபுறமாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கன்டெய்னர் லாரியில் இருந்து புரூக்கோலிகள் வேறு லாரிகளுக்கு மாற்றப்பட்டு மீண்டும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் காரணமாக கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்