ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-28 22:00 GMT
வாலாஜாபாத்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மாதா கோவில் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு புற்றுநோய், கர்ப்பிணி பெண்களுக்கு சிசு பாதிப்பு, ஆண்மை குறைவு போன்றவை ஏற்படுவதோடு விலங்கு மற்றும் பறவைகள் அழிந்து விடும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு அருகே பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவை உள்ளதால் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க கூடாது என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.

மேலும் செல்போன் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு வளர்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று ஊராட்சி மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் மீறி வளர்புரம் ஊராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் கிராம மக்கள் ஒன்றாக திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடபோவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்