இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு தமிழகத்தில் தான் குறைந்து வருகிறது அமைச்சர் தகவல்

இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு தமிழகத்தில் தான் குறைந்து வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கரன் கூறினார்.

Update: 2018-07-28 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதியோர்களுக்கான சிறப்பு பிரிவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பரசுராமன் எம்.பி., சேகர் எம்.எல்.ஏ., தேசிய சுகாதார திட்ட குழும இயக்குனர் தாரேஷ்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன் வரவேற்றார்.

விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கான சிறப்பு பிரிவு மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையத்தை திறந்துவைத்தனர். பின்னர் மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தையும் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 15 சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு எந்திரங்களுடன் கூடிய புதிய ரத்த சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தீவிர சிகிச்சை பிரிவுடன் சேர்ந்து பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ரத்த சுத்திகரிப்பு மையம் அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு தனி வார்டு மற்றும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்கேனிங் சென்டர் தனி வார்டு போன்ற சிறப்பு வசதிகள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இப்பல்நோக்கு மருத்துவமனை விரைவில் திறக்கப்படவுள்ளது. அதனுடன் சேர்த்து இருதய சிகிச்சை பிரிவுக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டிலும் (கேத்லேப்), அதனுடன் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மற்றொரு இருதய சிகிச்சை பிரிவும் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் இருதயம் சார்ந்த அனைத்து சிகிச்சைகளையும் தஞ்சை மருத்து கல்லூரி மருத்துவமனையிலே மேற்கொள்ளலாம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவ மனைகளில் பார்க்கப்படுகின்றது. இதில் 70 சதவிகிதம் அரசு மருத்துவமனையில் தான் பார்க்கப்படுகின்றது. கோடியில் ஒரு சம்பவம் தான் இயற்கை முறையில் பார்க்கப்படுகின்றது. அது போன்று தான் சமூக வலைதளமான யூ டியூப் மூலம் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது களையப்பட வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டு, காவல் துறை மூலம் வழக்குப்பதிவுசெய்து, விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு சம்பவம் தமிழகத்தில் தான் குறைந்து வருகிறது. இதை 2030-ம் ஆண்டுக்குள் 70 ஆக குறைக்கவேண்டும் என மத்திய அரசு கூறி உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது 62 பேராக குறைந்துள்ளதற்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்திய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த ஆணையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., பால்வள தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மாநகர மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, இயக்குனர் சரவணன், கல்வி புரவலர் ரமேஷ், மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்