660 லிட்டர் சாராயம் கடத்திய 3 பேர் கைது கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

திருமருகல் அருகே 660 லிட்டர் சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-07-28 23:00 GMT
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் சாராயம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் தலைமையில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் திருமருகல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருமருகல் அருகே அண்ணாமண்டபம் என்ற இடத்தில் வேகமாக வந்த ஒரு காரை போலீசார் மறித்தனர். ஆனால் அந்த கார் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று திருப்புகலூர் அருகே மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 550 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது காரில் வந்தவர்கள் இறங்கி தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மானாம்பேட்டையை சேர்ந்த மணி மகன் அமிர்தலிங்கம் (வயது24), பரமநல்லூரை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி (26) என்பதும், இவர்கள் விழுதியூரில் இருந்து கங்களாஞ்சேரிக்கு புதுச்சேரி சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 550 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அதே பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி சென்ற விழுதியூரை சேர்ந்த வேலாயுதம் மகன் பாஸ்கர் (38) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்