விலங்கு நேசர்!
ஆதரவற்றுத் திரியும் கால்நடைகள் குறித்து யாரும் அக்கறை கொள்வதில்லை.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த தவுசீப் அகமது, அந்த ஜீவன்கள் பற்றிக் கவலைப்படுகிறார், அவற்றுக்குக் காயம் ஏற்பட்டால் மருந்திட்டுக் குணப்படுத்துகிறார். காயமடைந்த முரட்டுக் காளைக்கு மருந்திடும்போது அதனால் தனக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்றுகூட அஞ்சுவதில்லை.
எம்.பி.ஏ. பட்டதாரியான தவுசீப், ஒரு வெற்றி கரமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்துகிறார். அந்த நிறுவனத்தை மேலும் எப்படி வளர்ப்பது என்று தனது தொழிலில் கவனம் செலுத்திப் போயிருக்கலாம்.
ஆனால் வாயில்லாப் பிராணிகள் பற்றி அக்கறை கொண்ட தவுசீப், அதற்காக, ‘ஆதரவற்ற விலங்குகள் மீட்புக் குழு’ என்ற அமைப்பை நிறுவியிருக்கிறார்.
30 வயதாகும் தவுசீப், இதுவரை இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை மீட்டிருப்பதாகக் கூறுகிறார். ஆதரவற்ற கால்நடை களுக்கு நேரும் ஆபத்து பற்றி தவுசீப் ெசால் கிறார்....
‘‘நகர்ப்புறங்களில் கேட்பாரற்றுத் திரியும் மாடுகள் போன்றவற்றைப் பிடித்து விற்பதையே சிலர் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். ஒரு காளை மாட்டைப் பிடித்துச் சென்றால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்துவிடுகிறது. அதிலும் கால்நடைகளை இவர்கள் கையாளும் விதம் கொடூரம். அவற்றின் காலில் அடித்துக் கீழே விழவைத்து, லாரிகளில் இழுத்துப் போட்டுச் செல்வார்கள். இந்த வேலையில் முரட்டுக் கும்பல்கள் ஈடுபட்டுள்ளதால், அவர்களை எதிர்ப்பதற்கு எவரும் துணிவதில்லை.’’
தெருவில் திரியும் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிப்பதும் அவ்வளவு எளிதான விஷயமில்லை என்கிறார் தவுசீப்...
‘‘கால்நடைகள் பிறரை தங்களை நெருங்க விடுவதில்லை. உதாரணத்துக்கு, ஒரு கொம்பு முறிந்த காளை பற்றி நான் அறிந்தபோது, அதைத் தேடிச் சென்று சற்றுத் தள்ளி நின்றபடி ஆன்டி செப்டிக் மருந்தை தெளிக்க முயன்றேன். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. நான் அதன் அருகில் போனாலே முட்ட வந்தது. எனவே தொடர்ந்து மூன்று நாட்கள் அக்காளையைப் போய் பார்த்தேன். அதனுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியாக தர்பூசணித் துண்டுகளை வாங்கிக் கொடுத்தேன். அந்தக் காளை என்னுடன் ஓரளவு நட்பானபிறகு, வாழைப்பழத்துக்குள் வைத்து அதற்கான மாத்திரைகளைக் கொடுத்துவிட்டேன்!’’
தவுசீப்பின் இதுபோன்ற சிகிச்சை முயற்சிகளில் சில நேரங்களில் மாடுகள் ரொம்பவே ‘புத்திசாலித்தனமாக’ நடந்துகொள்வது உண்டாம்.
‘‘நான் ஒருமுறை ஒரு மாட்டுக்கு இப்படி வாழைப்பழத்தில் மாத்திரைகளை வைத்துக்கொடுத்தபோது, முதல் நாள் அது தெரியாமல் சாப்பிட்டுவிட்டது. ஆனால் அடுத்த நாள், மாத்திரைகளை நீக்கி உமிழ்ந்துவிட்டு, பழத்தை மட்டும் சாப்பிட்டது’’ எனச் சிரிக்கிறார்.
தவுசீப் இதுபோல காயமடைந்த கால்நடை களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக தினமும் 15 கி.மீ. தூரம் பயணிக்கிறார். காயமுற்ற கால்நடைகளை யார் பார்த்தாலும் இவருக்கு செல்போனில் தகவல் கொடுத்துவிடுகிறார்கள். இவருடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ள சிலர் ஆர்வத்துடன் முன்வந்தும் இருக்கிறார்கள்.
மாடுகள் மட்டுமின்றி, தெரு நாய்கள், பறவைகள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு நடமாடும் கடவுளாக தவுசீப் அகமது விளங்குகிறார். தனக்கு இந்தப் பணி மிகுந்த நிறைவும் திருப்தியும் அளிப்பதாக நெகிழ்ந்து சொல்கிறார்.
சக மனிதர்களைப் பற்றியே கவலைப்படாத இந்த உலகில், விலங்குகளுக்கு இரங்கும் தவுசீப்பை வெகுவாகப் பாராட்டலாம்!