புதுவைக்கு மாநில அந்தஸ்து விவகாரம்: கிரண்பெடி கருத்து குறித்து உள்துறை விளக்கம் கேட்க வேண்டும்
புதுவைக்கு மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள கருத்து மாநில மக்களிடையே மோதலை உருவாக்கும் விதத்தில் உள்ளது. இதுகுறித்து கவர்னரை அழைத்து உள்துறை அமைச்சகம், பிரதமர் விளக்க கேட்க வேண்டுமென அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெறுவது குறித்து கவர்னர் கிரண்பெடி தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருடைய கருத்து புதுவை மாநில மக்களிடைய மோதல் போக்கை உருவாக்கும் விதத்தில் உள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளதால் காலனி ஆதிக்கத்தின் கீழ் செயல்படக்கூடிய இடமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவுபோல புதுச்சேரி அரசியல் நிர்வாகம் இருந்து வருகிறது.
புதுவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து சம்பந்தமாக 1998–ம் ஆண்டிலேயே மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி கொள்கை முடிவினை அறிவிக்க செய்தார். அதேபோல் புதுச்சேரி சட்டசபையிலும் பலமுறை மாநில அந்தஸ்தை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுவையில் நடந்து முடிந்த சட்டசபையில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்களும் பாரபட்சமின்றி மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிபலிப்பாக மாநில அந்தஸ்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். ஆனால் சட்டசபை தீர்மானத்தை அவமதிக்கும் விதமாக முக்கிய பொறுப்பு வகிக்கும் கவர்னர் கிரண்பெடி தவறான தகவல்களை கூறி வருகிறார். அவருடைய கருத்தில் சுயநலம் உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமரும் கவர்னர் கிரண்பெடியை உடனடியாக அழைத்து விளக்கம் கேட்டு பெற வேண்டும்.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களையும் உள்ளடக்கிய மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் கொள்கை முடிவாகும். இதில் ஏதேனும் ஒரு பிராந்தியம் நிராகரிக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.
புதுவையில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கவும், புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட ஸ்மார்ட் மின் மீட்டரை திரும்ப பெற கோரியும் அ.தி.மு.க. சார்பில் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
புதுச்சேரியில் முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அரசால் ஏற்கனவே உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு கருத்துப்படி சபாநாயகரும் நல்ல முடிவினை எடுப்பார் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.