கும்பகோணத்தில் மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் சுகாதாரமின்றி பொது இடங்களில் மீன் விற்பனை செய்வதை கண்டித்து மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-27 23:16 GMT
கும்பகோணம்,


கும்பகோணம் ஒருங்கிணைந்த மீன் வியாபாரிகள் கூட்டமைப்பு மற்றும் பெரியார் மீன் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கும்பகோணம் மோதிலால் தெருவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மொத்த மீன் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.ராஜ் தலைமை தாங்கினார். முருகன், ரஷீது, ஜெய்லாபுதீன், சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாகுல்ஹமீது வரவேற்றார். இதில் கும்பகோணம் வர்த்தக சங்க தலைவர் சேகர், வக்கீல் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் சுகாதாரமின்றி மீனவ பெண்கள் மீன் விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்க வேண்டும். கோவில்களின் நகரமான கும்பகோணத்திற்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும். மீன் வியாபாரிகளுக்கு என்று தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும். கும்பகோணம் மீன் மார்க்கெட்டு அருகில் ஏற்படும் விபத்தினை தடுக்க மருத்துவமனை அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் தரமான மீன்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்படுகிறது என்பதை பொதுமக்களிடம் வாரம் ஒருமுறை மீன் வியாபாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் மீன் மார்க்கெட்டு முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், நகர்நல அலுவலர் பிரேமா ஆகியோரிடம் மீன் வியாபாரிகள் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்