இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்
இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும் என கூடுதல் தலைமை செயலாளர் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேருக்கு நீர் பாய்ச்சும் முறை தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்ய கோபால் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வேருக்கு நீர் பாய்ச்சும் முறையில் மரப்பயிர் மற்றும் காய்கறி சாகுபடி செய்தால் மற்ற முறைகளை விட கூடுதலான வளர்ச்சி இருக்கும். இதனால் காய்கும் திறனும் அதிகரிக்கும் இதன் மூலம் குறுகிய காலத்தில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறலாம். எனவே வேருக்கு நீர் பாய்ச்சும் முறையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். குறிப்பாக விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நீடாமங்கலம் வட்டம் கட்டக்குடி கிராமத்தில் கூடுதல் தலைமை செயலாளர் சத்யகோபால் வேருக்கு நீர் பாய்ச்சும் முறையின்கீழ் புடலங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, விவசாயிடம் பழைய நடைமுறை மற்றும் வேருக்கும் நீர்பாய்ச்சும் முறையின் வேறுபாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் அருகே அம்மையப்பனில் வேருக்கு நீர் பாய்ச்சும் முறையின்கீழ் நாவல், தேக்கு, கொய்யா ஆகியவைகள் பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவக்குமார், துணை இயக்குனர் கல்யாணசுந்தரம், உதவி கலெக்டர்கள் முருகதாஸ் (திருவாரூர்), பத்மாவதி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.