பள்ளி வேன் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
குன்னத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது பள்ளி வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். இது தொடர்பாக வேன் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்னத்தூர்,
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள நவக்கோட்டையை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 20). திருப்பூர் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (20). பிரதீப்குமார் மற்றும் வெங்கடேசன் இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர். வெங்கடேசன் எப்போதும் திருப்பூரில் இருந்து பஸ்சில் குன்னத்தூர் சென்று விட்டு அங்கிருந்து நண்பர் பிரதீப்குமாரின் மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதுபோல் மாலையில் இருவரும் ஒன்றாக மோட்டார்சைக்கிளில் திரும்பி வருவது உண்டு.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற பிரதீப்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மாலையில் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார்சைக்கிளை பிரதீப்குமார் ஓட்டி வந்தார். பின்னால் வெங்கடேசன் அமர்ந்திருந்தார். அவர்கள் குன்னத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதுபோல் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஸ்ரீவித்யாபவன் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடைசியாக பள்ளி மாணவி ஒருவரை பழையபாளையத்தில் இறக்கி விடுவதற்காக சென்றுகொண்டிருந்தது. அந்த வேனை ஈரோடு தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த ரத்தினம் (56) என்பவர் ஓட்டிச்சென்றார்.
குன்னத்தூரை அடுத்த சித்தாண்டிபாளையம் அருகே உள்ள ஒரு வளைவில் மாலை 5.30 மணி அளவில் அவர்கள் மோட்டார்சைக்கிள் வந்த போது எதிர்பாராதவிதமாக பள்ளிவேன் அவர்கள் மோட்டார்சைக்கிள் மீது மோதி யது. இந்த விபத்தில் மாணவர் பிரதீப்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர் வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து காரணமாக அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
பின்னர் பிரதீப்குமார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வேன் டிரைவரான ரத்தினம் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.