சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து சேலம், ஆத்தூர், எடப்பாடியில் நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இதில் தமிழக அரசு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்ச்செல்வன், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, மாவட்ட துணை செயலாளர் அன்னபூரணி, ஒன்றிய செயலாளர்கள் வே.செழியன், சுரேஷ்குமார், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், தலைவாசல் மணி, நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், ஆத்தூர் முன்னாள் கவுன்சிலர்கள் கமால் பாஷா, காசியம்மாள், ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதே போல சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாஷா வரவேற்று பேசினார். முன்னால் எம்.எல்.ஏ. காவேரி, மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர் கருணாநிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பூவாக்கவுண்டர், பரமசிவம், நிர்மலா, பச்சமுத்து உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சொத்துவரி உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, தீர்மானக்குழு உறுப்பினர் தாமரை கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன், பொருளாளர் சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநகர செயலாளர் ஜெயக்குமார், சேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ரெயின்போநடராஜன், வக்கீல் அண்ணாமலை, குமாரசாமிப்பட்டி பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி, ஓமலூர் ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் எம்.பி.மணி, மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.