ஓ.பன்னீர்செல்வம் குறித்து விமர்சனம்: ‘‘கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார்’’ அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடல்

‘‘ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விமர்சனம் செய்யும் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார்’‘ என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2018-07-27 21:30 GMT

கயத்தாறு, 

‘‘ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விமர்சனம் செய்யும் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார்’‘ என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கருணாநிதி உடல்நலம்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு நிலைகளிலும் மக்களிடம் தகவல் பரவியதாலும், இதுகுறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், அண்டை மாநில முதல்–மந்திரிகளும் நலம் விசாரித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் மீது சாடல்

துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால், அவரை பதவி நீக்கம் செய்வதுடன், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறுகிறார். எந்த சட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் பதவி விலக வேண்டும் என்று கூறப்படவில்லை.

நடிகர் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார். அவர் அரசியலுக்கே லாயக்கற்றவர். ஒருவர் மீது யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டு கூறலாம். அது நிரூபணமானால்தான் குற்றவாளியாக கருத முடியும். சட்டமன்ற கூட்டத்தொடர் 46 நாட்கள் நடந்தபோதும்கூட தமிழக அரசின் மீது யாரும் எந்தவித குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை.

பிரதமருக்கு முதல்–அமைச்சர் கடிதம்

பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவும், விலைவாசி உயர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பஸ்களில் விவசாயிகள் கட்டணமின்றி விளைபொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. பசுமை பண்ணை காய்கறி அங்காடிகளில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்