லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

கடலூர் மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2018-07-26 23:29 GMT
கடலூர்,



பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலும் நேற்று 7-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை தங்கள் வீடுகளிலும், வாகன நிறுத்தும் இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர். கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து பிளாஸ்டிக் ஏற்றிச்செல்லும் லாரிகள் எதுவும் வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் லாரிகளும் வரவில்லை. இதனால் சிப்காட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கமடைந்துள்ளன. உற்பத்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் கடலூர் மாவட்டத்துக்கு வராததால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயந்துள்ளது. கடலூர் அண்ணா மார்க்கெட்டில் கிலோ ரூ.36-க்கு விற்ற கேரட் ரூ.54-க்கும், ரூ.50-க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், ரூ.20-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.24-க்கும், ரூ.35-க்கு விற்ற அவரைக்காய் ரூ.45-க்கும், ரூ.90-க்கு விற்ற இஞ்சி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

எனினும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட உள்ளூர் காய்கறிகளின் விலையில் தற்போது எவ்வித மாற்றமும் இல்லை. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திட்டக்குடி, பெண்ணாடம், வடலூர், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் காய்கறிகளின் விலை உயர்ந்து உள்ளது. 

மேலும் செய்திகள்