முதுகலை பட்டதாரி பெண்ணை கடத்திய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி முதுகலை பட்டதாரி பெண்ணை கடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2018-07-26 22:46 GMT
அந்தியூர்,

முதுகலை பட்டதாரி பெண்ணை கடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடலை சேர்ந்தவர் வெங்கிடாசலம் (வயது 33). இவர் கோபியில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக் டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் அருகே உள்ள பள்ளியபாளையத்தை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி சத்யாவின் உறவுக்கார, முதுகலை பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி காரில் வெங்கிடாசலம் கடத்தி சென்றார். மேலும் தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, மதுரைக்கு காரில் அவசரமாக வரும்படி கூறினார். இதையடுத்து சத்யாவும் ஒரு காரில் மதுரை நோக்கி சென்றார். மதுரை அருகே உள்ள தேவன் தண்டா சோதனை சாவடி அருகே சென்றபோது வெங்கிடாசலம் காருடன் நின்று கொண்டிருந்ததை சத்யா கண்டார். அப்போது உன்னுடைய உறவுக்கார பெண்ணை நான் திருமணம் செய்யப்போவதால், விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு என்று சத்தியாவிடம் வெங்கிடாசலம் கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. மேலும் சோதனை சாவடியில் இருந்த போலீஸ்காரர்களிடம் சத்யா இதுபற்றி முறையிட்டு உள்ளார். உடனே அங்கிருந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெங்கிடாசலம் நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் தன்னுடைய மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி வெங்கிடாசலம் கடத்தி விட்டார் என அந்தியூர் போலீசில் அந்த முதுகலை பட்டதாரி பெண்ணின் தந்தை புகார் செய்தார். புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கிடாசலத்தை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை ஐகோர்ட்டில் வெங்கிடாசலம், முன் ஜாமீன் பெற்றார். வெங்கிடாசலத்தின் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்