100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பணி வழங்கக்கோரி பொட்டியபுரத்தில் பெண்கள் சாலை மறியல்

100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பணி வழங்கக்கோரி பொட்டியபுரத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-26 22:30 GMT
ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பணிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஏரி புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் பண்ணை குட்டை, மண் கரை அமைத்தல், கற்களால் கரை கட்டுதல் போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது.

பொட்டியபுரம் ஊராட்சியில் 4 மண் கரை கட்டும் பணியும், 1 பண்ணை குட்டை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதில் 114 பேர் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் மீதமுள்ள பெண்களுக்கு பணி வழங்கப்படவில்லை என தெரிகிறது. எனவே அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் இல்லை யெனில் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அனைவருக்கும் வேலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஓமலூர் - தின்னப்பட்டி ரோட்டில் பொட்டியபுரத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் சுழற்சி முறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்