தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 ஆயிரம் ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவி வழங்கப்படாத நிலை
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டு முதல் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் திருமணம் நிதிஉதவி கேட்டு விண்ணப்பித்த 4 ஆயிரம் ஏழை பெண்களுக்கு உதவி வழங்கப்படாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 1 பவுன் தங்கமும், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் திருமண நிதி உதவியும் வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை சமூகநலத்துறை பெற்று அரசுக்கு அனுப்பி வைக்கிறது. ஏழை, எளிய பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இத்திட்டத்தில் நிதி உதவி பெறுவோருக்கு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் இணைக்காத விண்ணப்பதாரர்களுக்கு உதவி தொகை வழங்க இயலாது என மறுக்கப்பட்டு விட்டது. திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்கும் போதே இந்த சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விண்ணப்பதாரர்களிடம் தெரிவிக்காத நிலையில் அவர்கள் தாமதமாக சான்றிதழ்களை கொடுத்த போது அதனை மாவட்ட சமூகநலத்துறை ஏற்றுக்கொண்ட போதிலும் தமிழக அரசு இவ்வாறு தாமதமாக சான்றிதழ்களை சமர்ப்பித்த 1000-க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவி வழங்க இயலாது என மறுத்து விட்டது.
கடந்த 2016-17-ம் நிதி ஆண்டின் இறுதியிலும், 2017-18-ம் நிதி ஆண்டிலும் திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பித்த 4 ஆயிரம் ஏழை பெண்களுக்கு இதுவரை திருமண நிதி உதவி வழங்கப்படாத நிலை உள்ளது. அதன் பின்னர் நடப்பு நிதியாண்டில் கடந்த 2 மாதங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் திருமண நிதிஉதவி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு திருமண உதவி வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இது பற்றி சமூகநலத்துறையில் ஒரு அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பித்து இருந்த 300 பேருக்கு கடந்த மார்ச் மாதம் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர் திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் விவரம் பற்றி மாநில அரசிடம் இருந்து தகவல் ஏதும் கேட்கப்படவில்லை. தற்போது தான் இது பற்றிய விவரம் கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நலத்துறை இதற்கான பட்டியலை தயார் செய்து விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னரே எத்தனை பேருக்கு திருமண நிதி உதவி வழங்கப்படும் என தெரியவரும். தற்போது வரை விண்ணப்பித்த அனைவருக்கும் நிதி உதவி கிடைக்க மேலும் தாமதம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுவாக திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்கும் போதே திருமண அழைப்பிதழையும் இணைத்து தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. எனவே திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும் போது திருமணம் நடந்து முடிந்துவிடும்.
எனினும் இத்திருமண நிதி உதவி விரைவில் வழங்கப்பட்டால் ஏழை பெண்களின் குடும்பத்தாருக்கு உதவிகரமாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் இம்மாவட்டத்தில் திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பித்துள்ள ஏழை பெண்களுக்கு விரைவில் நிதி உதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.