நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-26 22:15 GMT
ராமநாதபுரம்,


ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது47). ராமநாதபுரம் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7 வார்டுகளில் வரிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் ராமநாதபுரத்தை சேர்ந்த சுகந்தகுமார் என்பவர் தனக்கு சொந்தமான 3 சென்டு நிலத்திற்கு வரி போடுவதற்கு அணுகி உள்ளார். ரூ.8 ஆயிரம் வரி போட்டு ரசீது வழங்குவதற்கு கணேசன் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து சுகந்தகுமார் ராமநாதபுரம் லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ஆலோசனையின்பேரில் சுகந்தகுமார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்து வருவாய் உதவியாளர் கணேசனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஜானகி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று வருவாய் உதவியாளர் கணேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த வரி பணம் ரூ.8 ஆயிரம் மற்றும் லஞ்ச பணம் ரூ.4 ஆயிரம் என மொத்தம் ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்