விராலிமலை முருகன் கோவில் மலைக்கு வாகனங்கள் நேரடியாக செல்ல ரூ.4 கோடியில் சாலை

விராலிமலை முருகன் கோவில் மலைக்கு வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-07-26 23:00 GMT
அன்னவாசல்,

வருவாய்த்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 509 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சம் மதிப்பீட்டிலும், விராலிமலையில் 301 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;-

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விராலிமலை மலங்குளம் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இதேபோல் விராலிமலை சந்தை ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. விராலிமலை முருகன் கோவில் மலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விராலிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மணப்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. திருச்சியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெய பாரதி, தாசில்தார்கள் சோனைக்கருப்பையா, பார்த்திபன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறுகையில், சட்டமன்றத்தில் இந்த ஆண்டு அறிவித்தபடி தமிழக அரசால் ரூ.4 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வலி நிவாரண சிகிச்சை பிரிவு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் ஒரு டாக்டர், 4 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதற்கென 10 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீராத நோய்களாக கருதப்படும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வலி இல்லாமல் உரிய உயர் சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாவட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு நன்கு பயிற்சி பெற்ற செவிலியர் பணியமர்த்தப்பட்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரடியாக அவர் களின் இல்லங்களுக்கு சென்று வலி இல்லாத வலி நிவாரண சிகிச்சைகள் வழங்கும் முன்னோடியான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. மேலும் இறுதி கட்டத்தில் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு நேயாளிகளுக்கு உருவாக கூடிய தற்கொலை எண்ணத்தை மாற்றி மன தைரியத்தை உருவாக்கும் விதத்தில் மனநல ஆலோசகர்கள் நேரடியாக இல்லங் களுக்கு சென்று ஆலோசனை வழங்க 104 போன்ற தனிப் பிரிவை விரைவில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்