சாமி கும்பிட விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
காஞ்சீபுரம் மாவட்டம், சாமி கும்பிட விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 59). இவரது மனைவி கன்னியம்மாள் (46). கடந்த 24-ந் தேதி கன்னியம்மாள் தனது வீட்டில் சாமி கும்பிடுவதற்காக விளக்கு ஏற்றியுள்ளார். விளக்கு திரியில் இருந்த தீ எதிர்பாராத விதமாக அவரது சேலையில் பிடித்தது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கன்னியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.