டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-26 22:30 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஊட்டத்தூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்தனர். அப்போது ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமையில், எதிர்ப்பு தெரிவித்து கடைக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாலையில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்ததால், ஊத்தங்கால் பொதுமக்கள் கடைக்கு முன்பு அமர்ந்து இரவு 10 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந் நிலையில் நேற்று காலை ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் எனக் கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து போலீசார் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடை திறக்கப்படாது என தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து 2 நாளாக டாஸ்மாக் கடை எதிர்ப்பு தெரிவித்ததால் கடை திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்