திண்டுக்கல் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். அப்போது அவர் தெருவில் தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
திண்டுக்கல்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். அன்றைய தினம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், திண்டுக்கல் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசியதாவது:-
இது நமது நகரம். எனவே, நகரை நாம் மிகவும் தூய்மையாக வைக்க வேண்டும். அது நம் அனைவரின் கடமை ஆகும். சுகாதாரம் இல்லாவிட்டால் கொசுக்கள் மூலம் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும். இதனால் மருத்துவ செலவு அதிகமாகும். தனிநபர் வருமானத்தில் 50 சதவீதம் மருத்துவத்துக்கு செலவு செய்யப்படுவதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் எனது சகோதரரை பார்க்க சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். அங்கு ஒரு பூங்காவுக்கு சென்றேன். குளிர்பானம் குடித்து விட்டு காலி பாட்டிலை மரத்தின் அருகே போட்டேன். சிறிது நேரத்தில் அதிகாரி வந்து எனக்கு 10 டாலர் அபராதம் விதித்தார். அதுபோன்ற நடவடிக்கையே அமெரிக்கா போன்ற நாடுகள் தூய்மையாக இருக்க காரணம். நாமும் வீட்டை போன்று நாட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குப்பைகளை கண்டபடி வீசக் கூடாது. இதற்காக அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து கவர்னர், தூய்மை இந்தியா இயக்க உறுதிமொழியை ஆங்கிலத்தில் வாசிக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் மாணவர்கள், அதிகாரிகள் உள்பட அனைவரும் ஏற்றனர். மேலும் மாணவர்களிடம் ‘சவுக்கியமாக இருக்கீங்களா’ என்று தமிழில் நலம் விசாரித்தார். பின்னர் தைரியமான மாணவர்கள் மேடைக்கு வந்து உறுதிமொழியை தமிழில் வாசியுங்கள் என்று கூறினார். உடனே கல்லூரி மாணவிகள் 2 பேர் வந்து தமிழில் உறுதிமொழி வாசிக்க, மீண்டும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதைத்தொடர்ந்து அரசு திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை கவர்னர் பார்வையிட்டார். பின்னர் தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அந்த பகுதியில் தூய்மை பணியில் அவர் ஈடுபட்டார். தெருவில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றினார். அப்போது துப்புரவு பணியாளர்களிடம், திண்டுக்கல் நகரை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஆர்.எம்.காலனி மின்மயானம் எதிரே மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்காவை திறந்து வைத்து மரக்கன்று நட்டார். பின்னர் பூங்காவை சுற்றிபார்த்த அவர், பொதுமக்கள் ஓய்வாக அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்த்தார். உடனே இருக்கையில் அமர்ந்து பார்த்த அவர், கூடுதலாக இருக்கைகளை அமைக்கும்படி அறிவுரை வழங்கினார்.
மேலும் நிலக்கோட்டை தாலுகா காமலாபுரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது ரூ.8½ லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கவர்னர் திறந்து வைத்தார். இதையடுத்து புதிதாக கட்டப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகளை பார்வையிட்டு சுகாதாரம் குறித்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கான சாவியை சம்பந்தப்பட்ட பயனாளியிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் அரசினர் விருந்தினர் மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்தார். மேலும் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக் கொண்டார்.
இதில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலர் ராஜகோபால், பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி கமிஷனர் மனோகர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.