தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பனிமயமாதா ஆலய திருவிழாதூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி நடக்கிறது. தற்போது 436–வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலையில் கொடிப்பவனி நடந்தது. திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து பவனியாக கொண்டு வரப்பட்ட கொடி ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் காணிக்கையாக எடுத்து வரப்பட்டன.
கொடியேற்றம்நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2–வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பிஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. வண்ண புகையும் வெளியிடப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் வண்ணமயமாக காட்சி அளித்தது.
இந்த விழாவில் பேராலய அதிபர் மற்றும் பங்கு தந்தை லெரின் டிரோஸ், பங்கு தந்தைகள், கீதாஜீவன் எம்.எல்.ஏ., கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பால், வாழைப்பழம் நேர்ச்சைமேலும் மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர்.
கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு பாதிரியார் விக்டர் லோபோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பலத்த பாதுகாப்புவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆலயத்தை சுற்றிலும் உயரமான கட்டிடங்களில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெண்கள் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.