கடையம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

கடையம் அருகே தர்மபுரமடம் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-26 21:30 GMT

கடையம், 

கடையம் அருகே தர்மபுரமடம் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் தர்மபுரமடம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது சம்பன்குளம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கிராம மக்களுக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் வாறுகால் சுத்தம் செய்யப்படுவதில்லை. குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை, தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை என தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.ம.க. ஒன்றிய செயலாளர் ஆதம்பின் ஹனிபா தலைமை தாங்கினார். த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் முகம்மது சரிப் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் இஸ்மாயில், துணை தலைவர் ஹனிபா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராமர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்