தூத்துக்குடியில் போலீசார் சோதனை: வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1¼ கோடி போதைப்பொருட்கள் சிக்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1¼ கோடி போதைப்பொருட்கள் சிக்கியது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீர் சோதனை
தூத்துக்குடியில் போதைப்பொருள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மணல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்த வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் ஒரு பையில் 8 பாக்கெட்டுகளில் மொத்தம் 9 கிலோ எடை கொண்ட பிரவுன் நிற எண்ணெய் போன்ற பொருளும், 9 கிலோ எடையில் கருப்பு நிற அல்வா போன்ற ஒரு பொருளும் சிக்கியது. அந்த பொருட்களை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அந்த வீடு அந்த பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகன் ஜெயரீஷ் என்ற ஜெனிஸ்டன் (வயது 53) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
ரூ.1¼ கோடி போதை பொருள்
இதைத்தொடர்ந்து அந்த பொருட்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவியுடன் ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர்.
அப்போது எண்ணெய் போன்ற பொருள் ‘ஹசீஷ்’ என்று அழைக்கப்படக்கூடிய கஞ்சா எண்ணெய் என்பதும், கருப்பு நிறத்தில் அல்வா போன்று இருந்தது, ‘சாரஸ்’ என்ற போதைப்பொருள் என்பதும் கண்டறியப்பட்டது. இந்த போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி 30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வீட்டு உரிமையாளர் கைது
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளர் ஜெயரீசை நேற்று பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஜெயரீசிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த போதைப்பொருட்களை பாதுகாப்பாக வைக்குமாறு கூறி உள்ளார். அந்த நபர் ஏற்கனவே மதுரையில் ஒரு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்ததாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வந்திருப்பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் யார்? எதற்காக ஜெயரீசிடம் போதைப்பொருட்களை கொடுத்து வைத்திருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், போதைப்பொருட்களை ஜெயரீசிடம் கொடுத்தவரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.