மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடலூர்,
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார் கடந்த 14-ந்தேதி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு கரையோரம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் தென்பகுதியில் பதிவு எண் இல்லாத பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் புலவனூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயவேல் மகன் மோகன்ராஜ் என்கிற சேகர் (வயது 29) என்பவர் மணல் கடத்திக்கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர் சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கத்தியை காட்டி மிரட்டினார். இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ் என்கிற சேகரை கைது செய்தார். டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் மோகன்ராஜை பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார். இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.