இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 16 மீனவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 16 மீனவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்களை அமைச்சர் வழி அனுப்பி வைத்தார்.
ராமநாதபுரம்,
கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டுருந்தபோது இலங்கைப் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டு, மீன்வளத்துறையை சார்ந்த அலுவலர்கள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட ராமேசுவரம் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 16 மீனவர்களை அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் இல்லத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
அப்போது தங்களை மீட்க மத்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்–அமைச்சருக்கும், மீன்வளத்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருக்கும் மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதன்பிறகு அமைச்சர் மணிகண்டன நிருபர்களிடம் கூறியதாவது:–
கச்சத்தீவு அருகே 5.7.2018 அன்று இரண்டு படகுகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 12 மீனவர்களும் 7.7.2018 அன்று ஒரு படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர் என்ற முறையில் என்னிடத்தில் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் தகவல் தெரிவித்ததோடு, மீனவர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதன்படி, முதல்–அமைச்சர் மத்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்களை தமிழகத்திற்கு பாதுகாப்பாக அழைத்துவர மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குனர் அரசின் சார்பாக இலங்கைக்கு சென்று கொழும்பில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக அழைத்து வந்தார்.
தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மீனவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உணவு அளித்து அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். செல்ல உரிய வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இத்தகைய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குந்துகால், மூக்கையூர் பகுதிகளில் ஆழ்கடல் மின்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு எந்த சூழ்நிலையிலும் மீனவர்களின் நண்பனாக அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.