சரக்குகள் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம்
கம்பம் அருகே, சரக்குகள் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடந்தது.
கம்பம்,
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரிகள் இயக்கப்படவில்லை. கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களின் 200-க்கும் மேற்பட்ட லாரிகளை கோசந்திர ஓடை அருகே உள்ள காலியிடத்தில் நிறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் கம்பம்-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்றன. இதனை கண்ட கம்பம்-கூடலூர் நகர லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாத்துரை தலைமையிலான நிர்வாகிகள் அங்கு சென்றனர். பின்னர் சரக்குகள் ஏற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை கோசந்திர ஓடை பகுதியில் காலியிடத்தில் நிறுத்தி வைத்தனர். இதனால் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுக்கும், டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை போலீசார் விடுவித்தனர். அந்த லாரிகளின் முன்பக்கத்தில், வேலை நிறுத்தம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை ஒட்டினர். இதற்கிடையே லாரி உரிமையாளர்களின் போராட்டம் எதிரொலியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, கம்பம், கூடலூர் பகுதியில் 1,200 லாரி மற்றும் மினி லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் கம்பம் பள்ளதாக்குப்பகுதியில் விளையக்கூடிய வாழை, இளநீர், தேங்காய், தென்னைநார், நெல் ஆகியவற்றை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வோம். இதேபோல் ரெடிமேடு ஆடைகள் மற்றும் மாடுகளும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.