ஒரு ஆண்டுக்கு முன்பு உயிர் இழந்த நாய்க்கு நினைவு நாள் அனுசரித்த தொழில்அதிபர்

பெங்களூருவில் ஒரு ஆண்டுக்கு முன்பு உயிர் இழந்த நாய்க்கு தொழில்அதிபர் நினைவு நாள் அனுசரித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-07-25 21:37 GMT
பெங்களூரு,

பெங்களூரு மல்லேசுவரம் அருகே வசித்து வருபவர் அருண். தொழில்அதிபரான இவர் தனது வீட்டில் சிண்டு என்ற நாயை கடந்த 17 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இதனால் அந்த நாய், அருண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம் உடல் நலக்குறைவு காரணமாக நாய் சிண்டு இறந்துவிட்டது. இதனால் அருண், அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில், நாய் சிண்டு இறந்து ஒரு ஆண்டு முடிந்ததை தொடர்ந்து, சிண்டுவுக்கு நினைவு நாள் அனுசரிக்க அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்ததுடன், ஒரு மனிதன் உயிர் இழந்த பின்பு, அவரது நினைவு தினத்தன்று கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளை அனுசரிக்க தீர்மானித்தனர். அதன்படி, மல்லேசுவரத்தில் உள்ள வீட்டில் நாய் சிண்டு இறந்து ஒரு ஆண்டு ஆனதையொட்டி நினைவு தினத்தை அருண், அவரது குடும்பத்தினர் நேற்று அனுசரித்தார்கள்.

இதற்காக வீட்டில் நாய் சிண்டுவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, விதவிதமான உணவு வகைகளை படையலிட்டு அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வழிபட்டனர். இதில், கலந்து கொள்ளும்படி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களையும் அருண் அழைத்திருந்தார். இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் நாயின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவ்வாறு வந்திருந்தவர்களுக்கு அருண் உணவுகளை வழங்கினார். இதை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் நெகிழ்ச்சி அடைந்தார்கள்.

இதுபற்றி அருண் கூறுகையில், “நாங்கள் சிண்டுவை எங்களது குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து தான் வளர்த்தோம். சிண்டு இறந்ததால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம். மேலும் சிண்டு இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டதால், சிண்டுவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினோம்“ என்றார்.

மேலும் செய்திகள்