6–வது நாளாக லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: காய்கறி வர்த்தகம் பாதிப்பு
6–வது நாளாக லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் காய்கறி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் வசூல், லாரிகளுக்கு காப்பீட்டு கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி கடந்த 20–ந்தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் காய்கறி வரத்து முற்றிலும் நின்று போனது. தேங்காய், தென்னை நார், இளநீர் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்வது தடைப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெபதாஸ், செயலாளர் சேனாதிபதி ஆகியோர் கூறியதாவது:–
பொள்ளாச்சி தாலுகாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக 2500 லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி உள்ள உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர், சரக்கு ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்து உள்ளனர். இதன் காரணமாக ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வீதம் கடந்த 6 நாட்களில் ரூ.300 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் முக்கிய தொழிலாக உள்ள தேங்காய், தென்னை நார், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் தேக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே லாரி உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:–
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் காய்கறி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக பொள்ளாச்சிக்கு காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் 15 டன் வரை கொண்டு வரப்படும். லாரிகள் ஓடாததால் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் வருவதில்லை. பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது மார்க்கெட்டுக்கு 5 டன் காய்கறிகள் தான் கொண்டு வரப்படுகின்றன.
இதன் காரணமாக 60 சதவீதம் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. லாரிகளில் 15 டன் வரை காய்கறிகளை ஏற்றி செல்லலாம். லாரிகள் ஓடாததால் சிறிய சரக்கு வாகனங்களில் காய்கறிகளை ஏற்றி செல்ல வேண்டிய உள்ளது. மேலும் கூடுதல் வாடகை கொடுக்க வேண்டிய உள்ளதால் கடும் சிரமமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:–
சின்ன வெங்காயம் அவினாசிபாளையம், துறையூர், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது. லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போதும், மகாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதியாவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தினமும் 10 லோடு பெரிய வெங்காயம் வருகிறது. ஆனால் இங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல லாரிகள் கிடைப்பதில்லை.
வழக்கமாக மினி லாரி போன்ற சிறிய சரக்கு வாகனங்களில் கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு வெங்காயம் ஏற்றி செல்ல ஒரு லோடுக்கு ரூ.1500 கொடுத்தால் போதும். ஆனால் தற்போது லாரிகள் ஓடாததால் ரூ.2500 வரை கூடுதலாக வாடகை கொடுக்க வேண்டிய உள்ளது. மேலும் குறைந்த அளவே வெங்காய மூட்டைகளை கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக கேரளாவில் வெங்காயம் விலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு சிலர் லாரிகள் கிடைக்காததால் வெங்காயத்தை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.