ஆகஸ்டு 6–ந்தேதி ரே‌ஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு

ரே‌ஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்டு 6–ந் தேதி வேலை நிறுத்தம் செய்வது என விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ரே‌ஷன் கடை ஊழியர்களின் அனைத்து சங்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-25 23:00 GMT

விருதுநகர்,

கூட்டுறவு ரே‌ஷன் கடை ஊழியர்களின் மாவட்ட அளவிலான அனைத்து சங்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் அசோகன் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் முகமதுஜலீல்தீன், மாவட்ட நிர்வாகி சம்பத், மாவட்ட செயலாளர் விஸ்வரூபகேசவன், பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் மாரிமுத்து உள்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தை பாதுகாத்தல், ரே‌ஷன் கடைக்கு வருகிற அனைவருக்கும் 100 சதவீத பொருட்கள் வழங்குதல், எடை குறைவு இல்லாமல் பொருட்கள் வழங்குதல், ஊழியர்களின் ஊதியம் குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் வழங்குதல், சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிப கழக ரே‌ஷன் கடை ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கி வேலை நிறுத்த தயாரிப்பு மண்டல மாநாடுகள் நடந்த போது கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து தொழிற்சங்க தலைவர்களிடமும், கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் அதற்கான மினிட்ஸ் வழங்கப்படவில்லை.

எனவே கோரிக்கைகளின் நியாயத்தை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6–ந்தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் முழுமையாக பங்கேற்பது என்றும், அன்றைய தினம் ரே‌ஷன் கடைகளை திறக்க கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்