மானாமதுரையில் முன்னறிவிப்பு இன்றி ரெயில்வே கேட் மூடல், வாகன ஓட்டிகள் அவதி
மானாமதுரை அண்ணாசிலை ரெயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக முன்னறிவிப்பு இன்றி கேட் மூடப்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
மானாமதுரை,
மானாமதுரை அண்ணாசிலை பகுதி நகரையும், பைபாஸ் ரோட்டையும் இணைக்கும் முக்கியமான பகுதியாகும். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கின்றன. மானாமதுரையில் இருந்து தினசரி ஏராளமானோர் மதுரை, பரமக்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். பலரும் அண்ணா சிலை பகுதியை கடந்துதான் சென்று வர முடியும். இதுதவிர கமுதி, பரமக்குடியில் இருந்து சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, சென்னை செல்ல இப்பாதையை கடந்துதான் செல்ல முடியும். அண்ணாசிலை அருகே மானாமதுரை–சிவகங்கை அகல ரெயில் பாதை செல்வதால் இங்கு தானியங்கி ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று காலை ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. பராமரிப்பு பணிக்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கேட் மூடப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவரும் இப்பாதை நாள் முழுவதும் மூடப்படுவது குறித்து பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு முன்னரே அறிவிப்பு செய்திருக்கலாம். ஆனால் இதனை தவிர்த்து திடீரென ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரும் தவிப்பிற்குள்ளாகினர். அவர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டியிருந்தது. முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் கேட் மூடப்பட்டதால் தவித்தனர்.
மேலும் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரி கீழ்கரையில் அமைந்திருப்பதால் அவசரத்திற்கு நீண்ட தூரம் சுற்றி சென்றதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் நோயாளிகள் அவதியுற்றனர். எனவே இனிவரும் காலங்களிலாவது பராமரிப்பு பணி உள்ளிட்ட பணிகள் குறித்து முன்னறிவிப்பு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.