நிலத்தகராறில் மூதாட்டி வெட்டிக்கொலை மகன் போலீசில் சரண்

பர்கூர் அருகே நிலத் தகராறில் மூதாட்டியை வெட்டிக்கொலை செய்த அவரது மகன் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2018-07-24 22:15 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சிகரலப்பள்ளி ஊராட்சியில் பார்டர் காட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வீராசாமியின் மனைவி லீலாவதி (வயது 72). இவர்களுடைய மகன் சுரேந்திரன் (45). இவர்களுக்கு பார்டர் காட்டூர் பகுதியில் நிலம் உள்ளது.

இந்த நிலம் தொடர்பாக தாய் - மகன் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இந்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. இது லீலாவதிக்கு சாதகமாக அமைந்தது.

அந்த நிலத்தை அளப்பதற்காக வருவாய்த்துறையினர் நேற்று செல்வதாக இருந்தனர். இதற்கிடையே நேற்று பிற்பகல் நிலத்தின் அருகில் தாய் லீலாவதி, மகன் சுரேந்திரன் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேந்திரன், அரிவாளால் தாய் லீலாவதியை வெட்டினார். இதில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த லீலாவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

தாயை கொலை செய்த சுரேந்திரன் பர்கூர் போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாயை கொலை செய்த மகன் சுரேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்