பழனி வனச்சரக பகுதியில் புலி, சிறுத்தை, செந்நாய் கணக்கெடுப்பு

பழனி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2018-07-24 22:00 GMT

பழனி,

கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்தில் பழனி வனச்சரகம் உட்பட 8 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் புலிகள், சிறுத்தை, செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் வனவிலங்குகளின் கால் தடங்கள், நகக்கீறல்கள் போன்றவற்றை துல்லியமாக கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலசமுத்திரம் மேற்குப்பகுதி பி.வி.வேலி காப்புக்காடு, கோணவாய்க்கால் உள்ளிட்ட வனச்சரகப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் மரங்களில் சிறுத்தையின் நகக்கீறல்கள் கண்டறியப்பட்டது.

மேலும் பழனி வனச்சரக எல்லையோர பகுதிகளில் உள்ள கந்தலாம்பாறை, செக்போஸ்ட், கோடம்பாறை, புளியமரத்துசெட், தேக்கந்தோட்டம் போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வன ஊழியர்களின் தொலைபேசி எண்கள் அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

வருகிற 30–ந் தேதி வரை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இறுதி 3 நாட்களில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள நேர்க்கோட்டுப்பாதையில் காணப்படும் வன உயிரினங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளது. மேலும் யானை, காட்டெருமை போன்றவைகளும் கணக்கெடுக்கப்படும் என பழனி வனச்சரக அலுவலர் கணேஷ்ராம் தெரிவித்தார்.

இதேபோல் கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த 2014–ம் ஆண்டு கொடைக்கானல் பகுதியில் 5 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. தற்போது தேசிய புலிகள் பாதுகாப்பு மையத்தின் சார்பில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதற்காக கொடைக்கானல் வனக்கோட்ட பகுதியில் உள்ள வந்தரேவு, மன்னவனூர், பூம்பாறை, கொடைக்கானல், பெரும்பள்ளம், தேவதானப்பட்டி, பேரீஜம் ஆகிய வனச்சரகங்களில் உள்ள 72 இடங்களில் வனத்துறையை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை மாவட்ட வனஅலுவலர் தேஜஸ்வி, வனச்சரகர்கள் ஆனந்தகுமார், கிருஷ்ணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதற்கட்டமாக புலிகளின் கால் தடங்கள், எச்சம், வாழ்விடங்கள் குறித்து கண்டறியப்படுகிறது. பின்னர் அடுத்த வாரம் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் புலிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்