விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விழுப்புரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-24 23:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வீராசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் கண்டன உரையாற்றினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைக்க கூடாது, தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், கிராமப்புற மக்களுக்கு நூறுநாள் வேலையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், துணை செயலாளர்கள் தாமோதரன், ஆனந்தராஜ், துணைத்தலைவர்கள் மணிமாறன், மணிகண்டன், பழனி, முனியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து மாலை 4.15 மணிக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். அவர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தி, குறிப்பிட்ட சிலர் மட்டும் மனு கொடுக்க உள்ளே செல்லும்படி கூறினர். அதனை ஏற்க மறுத்த அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்