இளையான்குடி பகுதி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

இளையான்குடி பகுதி கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2018-07-24 22:15 GMT

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் 55 ஊராட்சி மன்றங்களை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக இளையான்குடி உள்ளது. இளையான்குடி, சாலைகிராமத்தை சுற்றிலும் 300–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால் இந்த கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனால் விலை கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர். சில கிராமங்களில் போர்வேல் மூலம் கிடைக்கும் தண்ணீரை குடிக்கவும், சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இதுகுறித்து வளையனேந்தல் கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறியதாவது:–

வளையனேந்தல் கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இளையான்குடியில் இருந்து இங்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் சரிவர வராததால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்காததால் உப்பு தண்ணீர் கொண்ட குடிநீர் தொட்டியில் வரும் தண்ணீரை பிடித்து சமையலுக்கும், குடிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தனியாரிடம் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்குவதற்கு உள்ள மின் மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களின் சொந்த செலவில் மின் மோட்டார் சரிசெய்து ஓரளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மோட்டார் மூலம் வெளியேறும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு போதிய நீர்தேக்க தொட்டி இல்லாததால் பெரும்பாலான தண்ணீர் அருகில் உள்ள கண்மாய்க்கு வீணாகி செல்கின்றது.

எனவே வலையனேந்தல் மட்டுமின்றி மற்ற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்