100 நாள் வேலை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

100 நாள் வேலை வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-24 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாவட்ட பொருளாளர் மருதமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். துணை செயலாளர்கள் செல்வராஜ், உமாபாரதி, துணைத்தலைவர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் 100 நாள் வேலையில் கூலிக்காக ஒதுக்கிய நிதியை சட்டத்திற்கு புறம்பாக மகளிர் மேம்பாட்டுக்குழு கட்டிடம் கட்ட ஒதுக்கிய உத்தரவை திரும்ப பெற வேண்டும். டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.24 கோடி ஒதுக்கியதை விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.


நடவு எந்திரத்துக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்பதை நிறுத்தி நடவு பணியில் ஈடுபடும் பெண் விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். வேலை கேட்டு வரும் விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நீலமேகம், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பழனிசாமி, மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், மாலதி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்